அமெரிக்காவில் தீயாய் பரவும் கொரோனா…

அமெரிக்காவில், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாஸ்குகளை பயன்படுத்துவதற்கான நிபந்தனையை அமெரிக்கா சமீபத்தில் நீக்கியது.  

இந்தியாவில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைப் போல, உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவிலும், தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. மார்ச் 8 -க்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து  சென்ற மாத இறுதியில் முதல் முறையாக  அமெரிக்காவில் ஒரு நாளில் 1 லட்சத்து 8 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவானது.

தற்போது, ​​அமெரிக்காவில் (America) சராசரியாக தினசரி 63 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. கொரோனாவின் இந்த புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்காவின் கவலையை அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீரென அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கி விட்டதை குறிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களில், தொற்று பாதிப்புகள் 170 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அமெரிக்கா உலகின் மூன்றாவது பெரிய நாடு. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடி ஆகும், இதில் 17 கோடி மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்.