ஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்

ஆவினில் கடந்த காலங்களில் விளம்பரம் செய்ததில் ரூ.10.37 கோடி ஊழல் நடைபெற்றதும், அது தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது திமுக (DMK) ஆட்சி வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் (SM Nasar) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் (Aavin) ஆய்வு மேற்கொண்டார். தொடந்த நடந்த ஆய்வில் ஆவின் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

அதன்படி பல்வேறு நடவடிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்கள் உள்ளிட்ட 34 முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில் ஆவினுக்கு விளம்பரம் செய்ததில், ரூ.10.37 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்புடைய கோப்புகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.10.37 கோடியில் ரூ.4.44 கோடி செலவுக்கான 78 கோப்புகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5.93 கோடிக்கான கோப்புகள் மாயமானதை விசாரணை அதிகாரி அலெக்ஸ் ஜிவதாஸ் கண்டுபிடித்து அறிக்கை செய்துள்ளார்.