OPS அவசர தில்லி பயணம்…

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், மேற்கொள்ளும் திடீர் தில்லி பயணம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என முன்னாள் அமைச்சர் சி.வி.ஷண்முகம் கூறியிருந்தார்.
  • பாஜக கூட்டணி உடைய போகிறதா என்ற கேள்விகள் எழும்பியது.
  • அமமுகவை கலைத்துவிட்டு சசிகலா அதிமுகவுடன் இணைய போகிறார் என்ற செய்திகள் வெளிவருகின்றன.

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் (Cabinet Expansion)  ஓ.பன்னீர் செல்வத்தின் (OPS) மகனும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன, ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக பாஜக (BJP) உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.ஷண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜக தலைவராக இருந்த திரு.எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு  பாஜக தரப்பில், தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும் பேசப்பட்டதை அடுத்து, அதிமுக – பாஜக கூட்டணி உடைய போகிறதா என்ற கேள்வி எழும்புகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என விளக்கம் அளித்தனர். இது தவிர சமீப காலங்களில் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பலர் திமுகவில் (DMK) இணைந்துள்ளது, உட்கட்சி பூசல் குறித்த செய்திகள், சசிகலா தொடர்பாக வரும் பரப்ரப்பு செய்திகள், அமமுகவை கலைத்துவிட்டு சசிகலா அதிமுகவுடன் இணைய போகிறார் என்ற போன்ற செய்திகள் ஆகியவை காரணமாக ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக மேற்கொள்ளும் இந்த தில்லி பயணம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.