பெண்கள் இலவச பேருந்து பயணம்; அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு.

அரசுப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.

 பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன்படி இது தொடர்பாக தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில்.,

ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது. நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள்  பேருந்துகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் நன்கு கண்காணித்து இறக்கி விட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.