தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை : தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் திரு. கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தை சிரழித்தார். அப்போது வெளி மாநில லாட்டரிகள் தமிழ் நாட்டில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சீட்டின் விலை 10 ரூபாய் என்றும், பரிசு ஒரு கோடி ரூபாய் என்றும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது.
இதன் காரணமாக, சீட்டாட்டம் , குதிரை ரேஸ் போல லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள், வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள். உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள், லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்தது.