இந்தியா- பாகிஸ்தான் 1971- நடந்த போரில் இந்தியா வெற்றி! 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்…
சென்னை:இந்தியா — பாகிஸ்தான் இடையே, 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றதன் பொன் விழா கொண்டாட்டம், சென்னையில் நடந்தது. வெற்றி விழா ஜோதியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார்.
இந்தியா — பாகிஸ்தான் இடையே, 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின், 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டங்களை, 2020 டிசம்பரில், பிரதமர் மோடி டில்லியில் துவக்கி வைத்தார்.
தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள தீச்சுடரில், நான்கு வெற்றி ஜோதிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஜோதி, போரில் பங்கேற்ற வீரர்கள், விதவைகள் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக, நாட்டின் நான்கு திசைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.இதன்படி, வெற்றி ஜோதி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக, ராணுவ தெற்கு மண்டலத்தில் உள்ள, தக் ஷிண பாரத பகுதியின் தலைமையகத்திற்கு, 20ம் தேதி கொண்டு வரப்பட்டது.
ஜோதியை, 12வது மெட்ராஸ் ராணுவ படை பிரிவினர், உரிய மரியாதையுடன் பெற்றனர்.
இதையடுத்து, வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம், சென்னையில் நடந்தது.விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தக் ஷிண பாரத ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருணிடம் இருந்து, வெற்றி ஜோதியை பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
இந்தியா — பாகிஸ்தான் இடையே நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது மிகச் சிறந்த மைல்கல். இந்த வெற்றி பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது.
இந்த வெற்றி எளிதாக கிடைக்க வில்லை. இதற்கு நாம் மிகப்பெரிய விலை கொடுத்து உள்ளோம். நாட்டின் குறிக்கோளை அடைய, பாதுகாப்பு படைகள் செய்த தியாகங்கள் இவற்றில் முதன்மையானவை. இந்த வெற்றிக்காக போர் வீரர்கள் அனைவருக்கும் என் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ராணுவ வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், ராணுவ உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த வெற்றி ஜோதி, வரும், 30ம் தேதி, அந்தமான் நிகோபார் தீவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
News: s.md.rawoof