‛‛தமிழக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது,” என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் உயர்த்த ஆலோசனை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ‛‛தமிழக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது,” என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை கடந்த 2017-18ல் 58.69 லட்சமாக இருந்தது. எனினும் 2018-19ல் 70.71 லட்சமாக அதிகரித்தது. பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய அரசின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது தற்போது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது

கொரோனா 2-வது அலை கட்டுக்குள் இருப்பதால் கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரிபவர்கள் ஒழுங்காக பணிபுரிவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவி வருகிறது.

இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணிபுரிய வேண்டும். இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலி ரூ.273லிருந்து ரூ.300 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. ஆகவே, இதை பயன்படுத்திக் கொண்டு பணியாளர்கள் கிராமப்புறங்களில் சிறப்பாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி