நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரானது ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூடும் முதல் கூட்டத் தொடர் என்பதால் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப தி.மு.க எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஏற்கனவே கூறியிருந்த இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே போல் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை திமுக எம்.பி.க்கள் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 13 பிரச்னைகளை எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க திமுக எம்.பி,க்கள் திட்டமிட்டுள்ளனர்.

திருச்சியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி சிறையில் மரணம் அடைந்த நிலையில், அது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் தி.மு.க எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்குவதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவை குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய திமுக எம்.பி.க்கள் தயாராக இருக்கின்றனர்.

இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

செய்தி: S.MD. ரவூப்