இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 80 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று.

வரலாற்றை எழுதும் போது கி.மு.கி.பி,என்று குறிப்பிடுவது வழக்கம்.தமிழ்த்திரையின் வரலாற்றை எழுதும் போது பாரதிராஜாவின் “பதினாறு வயதினிலே”படத்திற்கு முன்,பின் என எழுதும் ஓர் பதிவிற்கு காரணமானவர் பாரதிராஜா.ஸ்டுடியோவுக்கு உள்ளே செட் போட்டு முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்து மண்வாசனையை நுகர வைத்தவர் பாரதிராஜா. 1941ஆம் ஆண்டு ஜூலை 17 ம் திகதி தமிழ் நாடு தேனி மாவட்டம் “அல்லிநகரம்”எனும் ஊரில் பெரியமாயத்தேவர், மீனாட்சியம்மாள் (கருத்தம்மா) தம்பதிகளுக்கு 5 வது மகனாக பிறந்தார். இயற்பெயர் “சின்னச்சாமி” பள்ளிப்படிப்புக்கும் இவருக்கும் தூரம் அதிகம்.சிறு வயதிலிருந்தே, சதா சர்வ காலமும் இவரது சிந்தனை எல்லாம் சினிமா, நாடகம் என்று தான் ஊறிக்கிடக்கும்.எங்காவது ஓர் காட்டுக்குள் சென்று விட்டு பாடசாலை மணி அடித்ததும் வீட்டுக்குள் சென்று விடுவது இவரது வழக்கம். பாரதிராஜாவுக்கு சினிமா மோகம் வரக்காரணம் அவரது பள்ளி வாத்யார் ராமலிங்கம் ஆவார். பள்ளிப்பாடங்களை பாரதிராஜாவை விட்டு வாசிக்கச் சொல்வாராம்.இவரும்,பராசக்தி, மனோகரா,வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வசனங்களை சிவாஜி பேசியதைப் போல் வாசிப்பாராம்.இதனால் ராமலிங்க வாத்தியார் இவர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் .ஒரு சமயம் ஓர் நாடகத்தை எழுதி இயக்கும் வாய்பை வாத்தியார் இவருக்கு வழங்கவே,அந்நாடகம்  பள்ளியில் பிரமாதமாக பேசப்பட்டது. ராமலிங்கம் வாத்தியார் சினிமாவில் நீ பெரிய ஆளாக உயர்வாய் என அப்போது ஆசீர்வாதம் வழங்கினார். காலப்போக்கில் அவரின் ஆசீர்வாதம் பலித்தது.படிப்பிற்கு பின் சுகாதார அதிகாரியாக அரசுப் பணியில் பணியாற்றினார். அந்நேரத்தில் “பண்ணைபுரம்”என்ற ஊருக்கு பணி நிமித்தமாக சென்ற வேளையில் ராசையா என்ற இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன், போன்ற இசை ஆர்வலர்களின் நட்பு கிடைக்கவே, இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நாடகம், பாட்டு என பொழுதுகளை கழித்தனர்.இவர்களில் முதன் முதலாக சென்னை வந்தவர் பாரதிராஜா, முதலில் புட்டண்ணாகனகல்,புல்லையா,கிருஷ்ணன் நாயர்,ஜெகந்நாதன் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். அப்போது புட்டண்ணா கனகல் இயக்கத்தில்  “ஏவிஎம் ராஜன் வாணிஸ்ரீ நடித்த “இருளும் ஒளியும்”படம் தயாராகிற நேரத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நட்பும் கிடைத்தது. இவர்களின் உதவியுடன் “ஊர் சிரிக்கிறது”,”சும்மா ஒரு கதை”ஆகிய நாடகங்களை மேடையேற்றி நாடக சினிமா உலகிற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் பாரதிராஜா. வானொலி நாடகங்களிலும் தன் பங்களிப்பை வழங்கினார். பின் ஓர் நாள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்தித்துப் பேசினார். தான்,சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்ததாக சிவாஜியிடம் கூற அதற்கு சிவாஜி உங்கள் ஊரில் கண்ணாடியே இல்லையா என பாரதிராஜாவைப் பார்த்து விளையாட்டாக கிண்டலடித்தார்.இவரது திறமை மீது நம்பிக்கை கொண்டு தயாரிப்பாளர்  எஸ்.ஏ ராஜ்கண்ணு கறுப்பு வெள்ளையில் “மயில்”என்ற படத்தை இயக்கும் பொறுப்பை பாரதிராஜாவிற்கு வழங்கினார்.பின்னர் இப்படம் “பதினாறு வயதினிலே “என தலைப்பு மாற்றப்பட்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வண்ணத்தில் எடுக்கப்பட்டது.பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் இப்படம் தயாரானது. இப்போது கோடிக்கணக்கில் பணம் வாங்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்திற்கு வாங்கிய தொகை வெறும் 3000/=ரூபா,அதிலும் 500/=பாக்கி.இப்படத்தை விநியோகஸ்தர்கள் யாருமே வாங்காத நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களே படத்தை வெளியிட்டார்.படம் வசூலை வாரிக்கொட்டியது.பாரதிராஜா ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.இப்பத்திற்கு ஆனந்த விகடன்  கொடுத்த மதிப்பெண் 62 சதவீதமாகும்,ஒரு படத்தின் விமர்சனத்திற்கு ஆனந்த விகடன் கொடுத்த அதிக பட்ச மதிப்பெண் இப்படத்திற்குத்தான் என தமிழ் சினிமாவில் ஓர் சாதனை உண்டு.  இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. மயிலு, சப்பாணி, பரட்டை போன்ற பாத்திரங்கள் பெரிதாக பேசப்பட்டன.பாக்யராஜ், மனோபாலா, மணிவண்ணன், போன்றோர் இவரது சினிமா பாசறையில் பயின்ற கலைஞர்களே.இதே வேகத்தில் மீண்டும் கிராமத்து காதல் கதையாக “கிழக்கே போகும் ரயில் “படத்தை சுதாகர், ராதிகா ஜோடியை அறிமுகமாக கொண்டு  எடுத்து வாகை சூடினார் பாரதிராஜா. கமல்,ஸ்ரீதேவி ஜோடியை மீண்டும் “சிவப்பு ரோஜா “படத்தில் இணைத்து இன்னொரு வெற்றியையும் கொடுத்தார்.பின், தன் சிஷ்யன் பாக்யராஜை கதாநாயகனாக கொண்டு இவரது இயக்கத்தில் வந்த புதிய பரிணாமம் படைத்த “புதிய வார்ப்புகள்”அமோக வெற்றி கண்ட படம்.இதையடுத்து வந்த “நிறம் மாறாத பூக்கள்”இவரது அடுத்த வெற்றி அத்தியாயம். இவருக்கு திருஷ்டி போல் அமைந்தது “நிழல்கள்”படம்.அருமையான மணிவண்ணனின் கதை வியாபார ரீதியில் தோல்வியை சந்தித்தது.இப்படத்தில் தான் கவிப்பேரரசு வைரமுத்து” பொன் மாலைப்பொழுது “என்ற பாடல் வாயிலாக அறிமுகமானார் .மீண்டும் ஓர் மணிவண்ணனின் கதையை “அலைகள் ஓய்வதில்லை “எனக்கொடுத்து அமோக வெற்றி கண்டு இந்திய சினிமாவில் ஜாம்பவான் ஆனார் பாரதிராஜா. இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் தமிழை உணர்ந்த நெஞ்ங்களில் அலை பாய்ந்தது.கார்த்திக், ராதா ஜோடி அறிமுகமாகி ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றனர். பின் இளையராஜா இசையில் இவரது இயக்கத்தில் இசையையும், பரதத்தையும் ஒன்றிணை
த்த படம்  “காதல் ஓவியம் “என்ன காரணத்தினாலோ பெரிதாக பேசப்படவில்லல.ஆனால் இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே பிரமாதமாக அமைந்தது. பாடகர் தீபன் சக்கரவர்த்திக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம்.மீண்டும் கிராமத்து காற்றை உள் வாங்கும் முயற்சியில் சாதாரண வளையல் வியாபாரம் செய்த பாண்டியனை கதாநாயகனாகவும் உன்னி மேரி என்ற கேரளக்கிளியான ரேவதியை கதையின் நாயகியாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு அமோக வெற்றி படம் “மண்வாசணை”நடிகை காந்திமதியினுள் இருந்த உணர்பூர்வ நடிப்பை வெளிக்கொண்டு வந்த மண்மணம் மாறாத கிராமத்தோவியம்
“மண்வாசணை “.இதே ஜோடியைக் கொண்டு,பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக “புதுமைப்பெண்”படத்தை இயக்கி மீண்டும் ஓர் வெற்றிப்பரிசை அளித்தார். சிவாஜியின் “வாழ்க்கை ” படமும்,”புதுமைப்பெண்ணும்”ஒன்றாக வெளிவந்து, “வாழ்க்கையை”முந்தியது  பாரதிராஜாவின் “புதுமைப்பெண்”.சிவாஜியின் பாராட்டுக்குரியவர் ஆனார் பாரதிராஜா. பின் கமல் இரட்டை வேடமேற்று வசூலில் சாதனை புரிந்த “ஒரு கைதியின் டயரி “ஹிந்தி சினிமா வரை பாரதிராஜா வின் பெரும் புகழை ஏந்திச்சென்றது. இப்படத்தை பார்த்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமித்தாப்பச்சன் கமல் நடித்த இருவேடங்களிலும் நடித்தார். ஹிந்தியிலும் இப்படம் அமோக வெற்றி, இதன் பிறகு தமிழ் சினிமா ஓர் புதிய பரிணாமத்தைக் கண்டு வியந்தது,ஆம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற இமயமும், இயக்குனர்  பாரதிராஜா என்ற  இமயமும் இணைந்து “தமிழ்த்திரை காவியமாக  “முதல் மரியாதை “என்ற ஓர் உன்னத படைப்பினை திரையோவிமாக வழங்கினார்கள்.இப்படத்தின் தலைப்பை சிவாஜிக்கு அளித்த முதல் மரியாதையாகவே இன்றளவும் பாரதிராஜா கருதுகிறார். இப்படத்தை பார்த்த கலைஞர் கருணாநிதி சிவாஜியின் எதார்த்தம் நிறைந்த நடிப்பினை கண்டு வியப்பதாக இருவருக்கும் நற்சான்று கொடுத்தார்.வில்லனாக பரிமளித்த சத்யராஜை “கடலோரக்கவிதை”யாக வடித்து, இளையராஜாவின் இசை துணை கொண்டு வெள்ளி விழா கண்ட படம் “கடலோரக்கவிதைகள்”இப்படத்தில் சின்னப்பதாஸ் பாத்திரத்தை சத்யராஜ் பின்னியெடுத்திருப்பார்.ஜாதி பாகுபாடு கருத்துக்களை ஓங்கி உரைத்துக்கூறி “வேதம் புதிது “என்ற ஓர் புதிய வேதத்தை சத்யராஜின் வித்தியாசமான நடிப்பில் உருவாக்கிய”வேதம் புதிது “தமிழ் சினிமாவில்,துணிந்து யாராலும் ஓத  முடியாத வேதமாகும்.சிவாஜி சாவித்திரி நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக விளங்கும் “பாசமலர்”படத்துக்கு ஈடாக கிராமிய மணம் கொண்டு விஜயகுமார், ராதிகா நடிப்பில் இவரது இயக்கத்தில் உருவான “கிழக்குச்சீமையிலே”இன்னொரு பாசமலரை வாசமாக்கியது.1977 இலிருந்து 1990 வரை தமிழ் சினிமா மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம்  ,ஹிந்தி மொழிகளிலும் சில படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார்.இயக்குநர் கே .பாலச்சந்தர் போல் இவரால் அறிமுகமானார்வர்கள்  தமிழ்த்திரையில் இன்றும் உயர்வாகவே  உள்ளனர்.நடிகனாக வேண்டும் என்ற ஆசை “கல்லுக்குள் ஈரம்”படத்திற்கு பின் “தாவணிக்கனவுகள்” “ரெட்டைச்சுழி””ஆயுத எழுத்து “பாண்டிய நாடு”போன்ற படங்களில் நிறைவேறியது, சிவாஜி கணேசன் இலங்கை வந்த போதும்,சென்னை கலைவாணர் அரங்கிலும் பாரதிராஜாவை நேரில் சந்தித்து உரையாற்றியதை பெருமையாக கருதுகின்றேன். 80 வயதிலும் இளமைத் துடிப்புடன் இன்னும் சினிமாவை வலம் வரும் பாரதிராஜா பல்லாண்டு வாழ்கவென இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்கின்றோம் .

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை