முன்விரோதம் தொடர்பாக நிலப்பிரச்சனை..
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளமேகம் (60) மற்றும் அவரது மனைவி ரெஜினா (47) ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (11.07.2021) காளமேகம் மற்றும் அவரது மனைவி ரெஜினா ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளனர். இதில் ரெஜினா சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.
இதுகுறித்து இன்று (12.07.2021) தகவலறிந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெஜினாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார். விசாரணையின் போது கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (74) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கருப்பசாமிக்கும் காளமேகத்திற்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (11.07.2021) கருப்பசாமி, காளமேகத்தின் வீட்டிற்கு சென்று காளமேகம் மற்றும் அவரது மனைவி ரெஜினாவை முன்விரோதம் காராணமாக இரும்பு கம்பியால் தாக்கியதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி