பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது..

சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது

அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில் பங்கேற்பதற்காக பால்கன் பறவைகளுக்கு குட்டி ரேடியோ விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

பால்கன் பறவை
அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் அமீரக மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் பாரம்பரிய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இந்த பால்கன் பறவை உள்ளது. அமீரகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் இந்த பறவைகளை வளர்ப்பதில் பெருமை கொள்கின்றனர்.பால்கன் பறவை தமிழில் வல்லூறு என அழைக்கப்படுகிறது. இதற்கு ராஜாளி என்ற பெயரும் உண்டு. மனிதர்களாலோ, விலங்குகளாலோ ஓடி வேட்டையாட முடியாத பாலைவனங்களில் சிறு முயல், எலி மற்றும் பறவைகளை வேட்டையாட இவை பயன்பட்டன.இந்தப் பறவைகள் தன் இரையை பிடிக்கும் போது மணிக்கு 250 முதல் 300 கி.மீ. வேகத்தில் பறக்கிறது. இரையை நெருங்கும் கடைசி வினாடிகளில் தனது இறக்கைகளை உடலோடு மடித்துக் கொண்டு, துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல மணிக்கு 400 முதல் 500 கி.மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லும். சாதாரண

பயணிகள் விமானத்தின் வேகம் மணிக்கு 700 முதல் 1000 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டை பழகுவதற்காக…
வீட்டில் வளர்க்கப்படும் இந்த பறவைகளை ஓய்வில் வைத்திருக்கும் நேரங்களில் முகமூடிகள் அணிவிக்கப்படுகிறது. அவ்வாறு முகமூடி அணிவித்து வைத்திருந்தால் அவற்றின் கவனம் சிதறடிக்க படாமல் இருக்கும். அதேபோல் வெளியில் எடுத்து செல்லும் போதும், வேட்டையின் போதும் ஏதாவது ஒரு இலக்கை மட்டும் நிர்ணயிக்க இவை உதவுகிறது. முகமூடியை அகற்றிய பின் அவற்றின் பார்வையில் படும் முதல் பொருள்தான் பால்கன் பறவையின் வேட்டையில் முதல் இலக்காக இருக்கும்.இதுவரை இந்த பறவைகளுக்கு வேட்டை பழகுவதற்காக ஏதாவது ஒரு சிறிய இறந்த பறவையின் பதப்படுத்தப்பட்ட இறகுகள் ஒரு நீளமான கயிற்றில் இணைத்து வைக்கப்படுகிறது.

சர்வதேச வேட்டை கண்காட்சி
பறவை இறகுடன் ஒரு சிறுதுண்டு இறைச்சியை இணைத்து கயிற்றை எடுத்துக்கொண்டு ஓடுவது அல்லது சுற்றுவதன் மூலம் பறவைக்கு வேட்டை கற்று கொடுக்கப்படுகிறது. இதில் தற்போது நவீன முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக ரேடியோ அலைவரிசையில் இயங்கும் சிறிய விமானங்கள் பால்கன் பறவையின் வேட்டை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருவத்தில் பால்கன் பறவையின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தை பால்கன் பறவைகள் துரத்தி சென்று பிடிக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ள சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், பயிற்சியளிக்கப்பட்ட இந்த பால்கன் பறவைகள் கலந்து கொள்கின்றன என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி