தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு!

Jul 12, 2021

விளாத்திகுளம் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மனு அளித்தார்.

விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

விளாத்திகுளம் மற்றும் எட்டையாபுரம் வட்டங்களில், வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக மானாவாரி கரிசல் காட்டிற்கு, வண்டல் மண், கண்மாய்களில் இருந்து விவசாயிகளுக்கு இலவசமாக அடிப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். விளாத்திகுளம் வைப்பாற்றில் மார்தாண்டம்பட்டி, சுப்பிரமணியபுரம், புளியங்குளம், விளாத்திகுளம், ஆற்றங்கரை, பேரிலோவன்பட்டி, முத்தலாபுரம் ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் நலன் கருதி மாட்டு வண்டிகளுக்கு என தனிமணல் குவாரி அமைத்திட வேண்டும். விளாத்திகுளம் வட்டம், வைப்பார் கிராமம் சர்வே நம்பர் 989 ல் அரசு கையகப்படுத்திய நிலத்தில் உடனடியானடிக சிப்காட் தொழிற்சாலை அமைத்திட வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தாமிரபரணி வைப்பாறு ஆறுகள் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்திட வேண்டும். 2020 – 2021 பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள், கரிசல்பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தனவதி, மாவட்ட பிரதிநிதியும் நெல்லை வேளாண் மண்டல ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்உறுப்பினருமான செண்பகப்பெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி