தமிழகத்தில் நாளை மறுநாள் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் இன்று மருத்துவ குழு மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌ என்றும் தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌ தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக்‌ கருத்தில்‌ 11 மாவட்டங்களில்‌ மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு நாளை மறு நாள் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் பின்னர் தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் நகர பஸ்களை மட்டும் இயக்க அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் மாநகர பஸ்களை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது. அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் படி வருகின்ற திங்கட்கிழமை முதல் 50 சதவீத பஸ்களை இயக்கவும் அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்க பட உள்ளது.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்