அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் ஓஎன்ஜிசி தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு, ஓஎன்ஜிசி நிறுவனம் − தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளின் உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுக்க கடந்த 2004ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் உரிமம் பெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும், மற்றும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அந்த ஏலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கிடையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்ததற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் , பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, பெட்ரோலிய அமைச்சகம் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை என கூறினர்.மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் ஓஎன்ஜிசி தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்றும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கறம்பக்குடி பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி – காமேஷ்