பப்ஜி விளையாட்டு மூலம் தனியாக சாட்டிங் செய்து சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறிப்பு யூடியூப் கேம் மதன் மீது குவியும் புகார்கள்
பப்ஜி விளையாட்டு மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் மூலம் தனியாக சாட்டிங் செய்து சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த யூ டியூப் கேம் மதன் மீது ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டாக பப்ஜி உள்ளது. இந்தியாவில் இதை விளையாடாத இளசுகள் மிகவும் குறைவு என்றே கூறலாம். இதற்கு மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். பல சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் பல லட்சத்தை இந்த விளையாட்டில் விட்டுள்ளனர். இப்படி இருந்த நிலையில் கடந்த ஆண்டு பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்தது. இதனை தொடர்ந்து கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இந்த செயலிகளை நீக்கியது. இது இளசுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் கொரியன் வெர்ஷன் மற்றும் விபிஎன்-ஐ பயன்படுத்தி பலர், இதை மீண்டும் விளையாடி வருகின்றனர்.
இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு முன்பே இதனை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து தமிழக இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் மதன் என்ற யூ டியூபர். விளையாடும் போது, அது பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் சரி. அவர்களை ஆபாசமாக திட்டுவதுதான் இவரது வழக்கம். பப்ஜி விளையாட்டுக்கு தமிழகத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கின்றனர். அந்த வகையில் சுமார் 8 லட்சம் பேர், மதனின் தீவிர யூ டியூப் பாலோவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலும் 18 வயதிற்கும் குறைவானவர்கள். இவருடைய யூ டியூப் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைத்து வைத்துள்ள மதன், யூ டியூப் பக்கத்தில் ஆபாசமாக விளையாடுவது மட்டுமின்றி, சில சிறுமிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருமாறு அழைத்து, அங்கே அந்தரங்க பேச்சுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
பத்மாசேஷாத்திரி பள்ளி விவகாரத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், தான் ஆன்லைன் விளையாட்டு வித்தைகளை ஆபாசமாக பேசி பதிவிட்டு லட்சங்களை சுருட்டிய கேமர் மதன் மீதும் புகார்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த 2 வருடங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் மூழ்கியுள்ளனர். குறிப்பாக கூட்டாக விளையாடக்கூடிய பிரசித்தி பெற்ற ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரி பையர் உள்ளிட்ட விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மதன், கேம் எப்படி விளையாட வேண்டும் என தெரியாதவர்கள் பலர், யூ டியூப்பை பார்த்து பப்ஜி விளையாட்டை நேரலையாக யூ டியூப் சேனலில் ஒளிபரப்பி வந்தார். மேலும் சேனலை 8 லட்சத்தும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு இதேபோல் பல சேனல்கள் வந்ததால் மதனின் சேனலுக்கு பார்வையாளர்கள் குறைந்தனர்.
இதை மீட்டெடுப்பதற்காக டாக்சிக் மதன் 18+ என்ற சேனலை உருவாக்கி அதில் பப்ஜி கேம் விளையாடுவதை நேரலையாக ஒளிபரப்புவது மட்டுமில்லாமல் ஆபாசமாகவும் பேசி பதிவிட்டார். 12 வயதிலிருந்து 20 வயது வரையிலானவர்கள் மட்டுமே இருப்பதால் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சேனலுக்கு குவிந்து பெரிதான வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலான பார்வையாளர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களை கவர்வதற்காக பெண் குறித்து மிகவும் இழிவாக பேசி பதிவிட தொடங்கினார். இதுமட்டுமின்றி கேமில் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இருப்பதாகவும், உங்களால் முடிந்த பணத்தை அனுப்பவும் என கேட்டு பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட மதன், சிறுமிகளிடம் தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்து ஆபாச உரையாடல் நடத்தி பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் கேமர் மதன் தனது அடையாளங்களை வெளிகாட்டாமல் இருந்து வந்துள்ளார். இதுபோன்று தொடர்ந்து மோசடி செயலிலும், பெண்களை ஆபாசமாகவும் பேசி வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது ஏராளமான புகார்கள் குவிய தொடங்கியது. சமூக வலைதளங்களில் மதனுக்கு எதிராக கோஷங்கள் கிளம்பி வந்த நிலையில், புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவிற்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, போலீசார் தேட தொடங்கியதால் மதன் தலைமறைவாகி விட்டார்.இதில், கேமர் மதன் சிறுமிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டாரா, டாக்சிக் மதன் 18 பிளஸ் சேனல் என்று பதிவிட்டாலும் முறையாக நிறுவனத்திடம் அனுமதி பெற்று ஒளிபரப்பி வருகிறாரா, சிறுவர்கள் பலர் 18 வயதை கடக்காமல் வயதை மாற்றி வீடியோ பார்த்து வருவது குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் குறித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவரது யூ டியூப் பக்கத்தை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர். மதன் மீது மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும், முதல்வர் தனிப்பிரிவு மற்றும் திருச்சி, கோவை போன்ற பகுதிகளிலும் புகார்கள் எழுந்துள்ளதால் யூ டியூப்பர் மதன் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்நிலையில் பல சிறுவர், சிறுமிகள் மதனுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தனது வாய் ஜாலத்தால் பல லட்சங்களை சம்பாதித்து அடுத்ததாக பாலியல் வரிசையில் வந்து சேர்ந்திருக்கும் மதன் போன்ற நபர்களையும் அவர்களது யூ டியூப் சேனல்களையும் முடக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
கைது செய்ய தனிப்படை
புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ‘பெண்கள் மற்றும் சிறுமிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஆபாசமாக பேசி, விளையாட்டு வீடியோக்களை வெளியிட்டு வரும் யூ டியூப்பர் மதன் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசகர்களிடம் பேசி வருகிறோம். மேலும், இந்த நபரின் யூ டியூப் சேனல், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விபிஎன் டவரை பயன்படுத்தி, அந்த நபர் தனது இருப்பிடத்தை மாற்றி வருவதால், அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபிஎன் சர்வரை பயன்படுத்தும்போது, ஒருவர் சென்னையில் இருந்து ஒரு பதிவை போட்டுவிட்டு, மீண்டும் சிறிது நேரத்தில் அவரே அமெரிக்காவில் இருந்து ஒரு பதிவை போடுவது போல் ஏமாற்ற முடியும். இதனால், இதுபோன்ற நபர்களை பிடிப்பது போலீசாருக்கு சற்று சவாலாக உள்ளது. இவர் ஆஜராக சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகாததால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,’
தமிழ்?மலர் செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.