2 கன்று குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி

தஞ்சாவூர் : பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி, தன் மகனின் படிப்புக்காக வளர்த்த, இரண்டு கன்று குட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மகேஷ்வரி, 42.

இவர்களுக்கு, கல்லுாரியில் படிக்கும் பிரசாந்த், 20, பிளஸ் 2 முடித்துள்ள சஞ்சய், 17 என இரண்டு மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன், 100 நாள் வேலை செய்தும், மாற்றுத் திறனாளி உதவித்தொகையிலும், குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தன் இளைய மகனை கல்லுாரியில் சேர்க்க, இரண்டு கன்றுக்குட்டிகளை வளர்த்தார். அதை, 6,000 ரூபாய்க்கு விற்று, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் நேற்று வழங்கினார். ரவிச்சந்திரன் கூறியதாவது:

நான் பி.எஸ்.சி., – பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன், பார்வையில் கோளாறு ஏற்பட்டது. கொரோனா நிவாரண நிதி வழங்க கையில் பணம் இல்லை. மகன் படிப்பு செலவுக்கு விற்கலாம் என வைத்திருந்த, இரு கன்றுக்குட்டிகளை விற்று நிதி வழங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் குருநாதன்