பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.

கேரளாவில், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண், 2010ல் திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்குப் பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை. அதனால் இரவில் மட்டும் ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வருவாராம். காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வாராம்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். அப்போது, காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. பெண்ணின் குடும்பத்தினரும் இதை எதிர்க்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு வார ஊரடங்கில், வீட்டில் இருக்க முடியாமல் வெளியே செல்ல துடிப்போர் மத்தியில், ஒரு பெண், 10 ஆண்டுகளாக ஒரே அறையில் இருந்தது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் மருதமுத்து