தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்

கழுகுமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் (27) என்பவரது வீட்டருகே உள்ள குடோனை சோதனை செய்த போது அதில் 16 மூடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் சுரேஷ் கண்ணனை விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக அவரது குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கண்ணனை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5,00,000/- மதிப்புள்ள 437 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

இந்த ஆண்டு இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 685 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 687 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிமிருந்து 3800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபடவர்கள்.

எனவே இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மற்றும் சட்டவிரோதமாக கள் இறக்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் விஜயராஜ்