கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை இன்று

கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2-ம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வகையிலும், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து எறியும் வகையிலும் வருகிற 7-ந்தேதி வரையிலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, 2 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் ரேஷன்கார்டு ஒன்றுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (மே) 31-ந்தேதி நிலவரப்படி 98.4 சதவீதம் குடும்பங்கள் முதல் தவணை நிவாரண உதவித்தொகையை பெற்றுள்ளனர். முதல் தவணை நிவாரண உதவி பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கொரோனா பாதிப்பு நிவாரண நிதி உதவியாக 2-வது தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம், கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதேபோல, தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் ஒரு கால பூஜையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோவில்களில் மாதச்சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், டாக்டர்கள், மருத்துவ பணியாளர், போலீசார் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ஆகிய உதவி வழங்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

  1. கோதுமை மாவு- (1 கிலோ)
  2. உப்பு- (1 கிலோ)
  3. ரவை- (1 கிலோ)
  4. சர்க்கரை- (½ கிலோ)
  5. உளுந்தம் பருப்பு- (500 கிராம்)
  6. புளி- (250 கிராம்)
  7. கடலை பருப்பு- (250 கிராம்)
  8. கடுகு- (100 கிராம்)
  9. சீரகம்- (100 கிராம்)
  10. மஞ்சள் தூள்- (100 கிராம்)
  11. மிளகாய் தூள்- (100 கிராம்)
  12. டீத்தூள்-2 (100 கிராம்)
  13. குளியல் சோப்பு-1 (125 கிராம்)
  14. துணி சோப்பு-1 (250 கிராம்)

-செய்தியாளர்
செய்யது அலி