நெல்லை மாவட்டம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உணவு வழங்கினார்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலீசார் பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா வள்ளியூர் பகுதிகளில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கினார்.

அம்பை

அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில், வசித்து வரும் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்களை வழங்கினர்.

மணிமுத்தாறு நகர பஞ்சாயத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் 70 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நிர்வாக அதிகாரி ராஜேஷ்வரன், தலைமை எழுத்தர் முனுசாமி, பணி ஆய்வாளர் முத்து குமாரவேல் ஆகியோர் வழங்கினர்.

மணிமுத்தாறு அருகில் உள்ள ஆலடியூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-ம் அணி சார்பாக கமாண்டென்ட் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் துண்டு பிரசுரங்கள், கபசுர குடிநீர் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் கூடங்குளம் பகுதிகளில் பசியால் வாடிய ஆதரவற்றவர்களுக்கு கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில், போலீசார் உணவு வழங்கினர்.
-செய்தியாளர்
செய்யது அலி