திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு இ-பதிவு கிடையாது

சென்னை: திருமணம் என்ற காரணத்திற்காக இ-பதிவு செய்ய முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பது மருத்துவ வல்லுனர்கள் கருத்தாக இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா, இல்லையா என்பதுபற்றி மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.

அப்போது மேலும் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இப்போது இருப்பதை விட மிகவும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் குழு முதல்வருக்கு பரிந்துரை செய்தது.

சட்டசபை குழு!!
இதைத் தொடர்ந்து, தமிழக சட்ட சபை உறுப்பினர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அவர்களும் அரசு எடுக்கக்கூடிய முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர். அதேநேரம் சில பரிந்துரைகளை எம்எல்ஏக்கள் முன்வைத்தனர்.

பிற மாநில பயணிகள்

அதில் முக்கியமான பரிந்துரை, தற்போது தமிழகத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். எனவே அதிகப்படியான வாகனங்கள் தமிழகத்திற்குள் வருகின்றன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு நடைமுறை அமலில் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். கடந்த வருடம் இ-பாஸ் நடைமுறை இருந்தது. அது கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வித்தியாசங்கள் உள்ளன

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உத்தரவை பிறப்பிக்கும் போது இ பாஸ் நடைமுறை பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இ-பதிவு மற்றும் இ -பாஸ் இடையே முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. இதனால்தான் அதிகப்படியான பயணிகள் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வர முடிகிறது என்கிறார்கள். அது என்ன வித்தியாசம் தெரியுமா?

இ-பதிவு என்றால் என்ன?

இ-பதிவு என்பது, நாம் எந்த விஷயத்துக்காக செல்கிறோம் என்ற விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்வது. அத்தோடு நமது அடையாள அட்டை , வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டியது அவ்வளவுதான். அதை காட்டிக் கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்ய முடியும் . காவல்துறையினர் சோதனை நடத்தும்போது செல்போனில் பதிவாகி உள்ள இந்த விஷயங்களை காட்டினால் போதும்.

இ-பாஸ் என்றால் கட்டுப்பாடுகள்

அதேநேரம், இ பாஸ் என்பது அப்படி கிடையாது. விண்ணப்பித்தால் அதை பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்படும். கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பரிசீலனை செய்து பாஸ் வழங்குவார்கள். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட பேருக்கு மட்டும்தான் பாஸ் என்பதால் அவர்கள் கெடுபிடி காட்டுவார்கள்.

மருத்துவ காரணங்கள்

இருப்பினும் அரசு இ-பாஸ் விஷயத்தை மறுபடி கையில் எடுக்கவில்லை. ஆனால் இ-பதிவில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதாவது திருமணம் என்ற காரணத்திற்காக இ-பதிவு செய்ய முடியாது. மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்திற்கு உள்ள பயணிக்க இ-பதிவு தேவைப்படுகிறது. ஆனால், மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்