கொரோனா சிகிச்சை மையம் திறப்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேர்ப்பு

சென்னை,
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளது. இதுமட்டுமல்லாது சென்னையில் கூடுதல் சித்தா சிகிச்சை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததும் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்க வேண்டாம். அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று, உடல் நலம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை முதலில் கேட்டறிய வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டுதனிமை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். எந்த சமயத்தில் மனதளவில் பயம் கொள்ள வேண்டாம். நாம் சுதாரிப்பாக செயல்பட்டால் கொரோனாவின் பிடியில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம். கொரோனா பாசிட்டிவ் வந்தும் அலட்சியமாக இருந்து வீட்டு தனிமையில் சிகிச்சை பெறவும் கூடாது. மருத்துவர் என்ன கூறுகிறாரோ, அதற்கு ஏற்றார் போல செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு வெளியே பலகை வைத்து மக்களுக்கு காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.. தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.தமீம் அன்சாரி