தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.
-செய்தியாளர்
செய்யது அலி