மின்சார வாரியம் அறிவிப்பு!

மே மாதத்தின் மின் அளவீடு கணக்கீட்டை பொதுமக்களே புகைப்படம் எடுத்து அனுப்பலாம்!
மின்சார வாரியம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதத்திற்கான மின்சார பயன்பாட்டை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்த மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் இந்த மாதத்திற்கான மின் கணக்கீட்டைச் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான மின்சார பயன்பாட்டை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்த மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்துக்கான மின் கட்டணத்தைப் பொதுமக்கள் சுய கணக்கீடு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதைப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்வழியாக அந்தந்த பகுதி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டுக் கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்