சென்னை

சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் உள்ள மருத்துவ படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சப்ளை, ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பது குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.
அப்போது மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘கொரோனா தொற்று தொடர்பான ஒரு பொதுநல வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அளவில் மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர், உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவை கடந்த 2020-ம் ஆண்டு அமைத்தது. இந்த உயர்மட்ட குழு, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி வெளியில் விட்டது. சிறை கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க இந்த உயர்மட்ட குழுவுக்கு கடந்த 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்மட்ட குழுவுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோரை கொண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்காக இந்த குழு ஆலோசனை நடத்தி, கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
பின்னர், செங்கல்பட்டில் மூடிக்கிடக்கும் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை திறக்க ஒப்பந்தம் கோரியுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்பின் எந்த தகவலும் இல்லை என்று வக்கீல் வில்சன் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘வருகிற 21-ந் தேதி செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் கடைசி நாள் ஆகும். அன்று இந்த ஒப்பந்தபணி முடிவு செய்யப்படும்’ என்று கூறினார். அந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்..
தமிழ் மலர்
மின்னிதழ்
செய்தியாளர்.
தமீம் அன்சாரி