தமிழக அரசு அறிவிப்பு.

ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினசரிபாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், நாளுக்குநாள் தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆக்சிஜன் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.