சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா சந்தேகம் குறித்த பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் செயல்படுகிறது. 044-46122300, 044-25384529 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் அழைத்து சந்தேகங்களை கேட்கலாம். கொரோனா பரவல் அதிகரிப்பதால் தொலைத்தொடர்பு மையத்தை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
நேரத்தை வீணாக்கும் வகையில் விளையாட்டாக போன் செய்ய வேண்டாம். தடுப்பூசி தொடர்பாக சந்தேகங்களை, உளவியல் ஆலோசனை போன்றவையும் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் சம்மந்தமும் இல்லை.

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், பேசிய அவர் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை கண்காணிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். கட்டுப்பாட்டு மையம் கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகள் அளிப்போம். முழு ஊரடங்கு இருக்காது. ஆனால், கடும் கட்டுப்பாடு இருக்கும். உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். திருமண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.