நடிகர் விவேக் காலமானார்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்
மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.

சென்னை

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 

59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.