இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தடைபடுவதாகவும் மத்திய அரசு மீது சில மாநில அரசுகள் குற்றஞ்சாட்டின. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய அரசு மீது ராகுல்காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பகுதிநேர அரசியல்வாதியாக தோல்வியடைந்துள்ள ராகுல்காந்தி தற்போது முழு நேர பரப்புரையாளராக மாறியுள்ளார். போர் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு பரப்புரை மேற்கொண்டு இந்தியாவின் கொள்முதல் நடைமுறைகளை தடம்புரட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார். 

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மருந்து நிறுவனங்களுக்கு அவர் தற்போது பரப்புரை செய்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறை பராமரிப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு தட்டுப்பாடு உள்ளதே தவிர கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்பதை ராகுல்காந்தி தெரிந்துகொள்ள வேண்டும். 

வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என தனது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும். இந்தியாவில் கொரோனா தடுப்புசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ராகுல்காந்திக்கு தான் கவனித்தல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

ராகுல்காந்தி ஏன் இன்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை? இது ஒரு மேற்பார்வையா? அல்லது அவர் கொரோனா தடுப்பூசி போடவிரும்பவில்லையா? அல்லது தகவல் வெளியிடப்படாத வெளிநாட்டுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அங்கு எங்காவது ராகுல்காந்தி கொரோனா தடுப்பூசி போடுக்கொண்டுவிட்டு அந்த தகவலை மறைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்