“சந்திரலேகா”

தமிழ்திரையின் பிரமாண்ட சினிமா தயாரிப்பு நிறுவனமான எஸ்.எஸ்.வாசன் அவர்களின் “ஜெமினி ஸ்டுடியோ”தயாரித்து,அதன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்து இயக்கிய “சந்திரலேகா”
திரைப்படம் வெளியாகி இன்றுடன் (09.04.1948) 73 ஆண்டு நிறைவடைகின்றது.சுமார் மூன்றரை வருடங்களுக்கு மேலாக அக்காலத்திலேயே முப்பத்தைந்து லட்சம் ரூபா செலவில் ஆங்கில, ஹிந்திப்படத்திற்கு நிகராக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. தமிழ்த்திரைக் கனவுக்கன்னி
டி.ஆர்.ராஜகுமாரி,எம்.கே.ராதா,ரஞ்சன்,
என்.எஸ்.கிருஷ்ணன்,டீ.ஏ.மதுரம்,
சுந்தரிபாய்,ஆர்.நாராயணராவ் மற்றும் பலரின் நடிப்பில்,கே.ஜே.மகாதேவன்,
கொத்தமங்கலம் சுப்பு,கிட்டு,நைனா போன்றோரின் திரைக்கதை அமைப்பில்,கமால் கோஷின் பிரமாதமானஒளிப்பதிவில்,
ராஜேஷ்வரராவ்,
பார்த்தசாரதியின் இசையமைப்பில்,
பாபநாசம் சிவன்,கொத்தமங்கலம் சுப்பு போன்றோரின் பாடல் வரிகளில் உருவான “சந்திரலேகா”இன்று வரை வசூலில் முறியடிக்க முடியாத ஓர் சாதனை படைத்தப் படமாகவே தமிழ் சினிமா வரலாறு குறிப்பிடுகின்றது. இப்படத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட பணக்கஷ்டத்தால் தனது ஜெமினி நிறுவனம்,தான் வாழ்ந்த வீடு போன்ற சொத்துகளை அடமானம் வைத்தார் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். 1948.04.09 அன்று தென்னிந்தியா முழுவதும் ஒரே நாளில் வெளியிட்டார்.
ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு வசூல் மழை பொழிந்தது “சந்திரலேகா “.இப்படத்திற்காக “கமலா சர்க்கஸ் “கம்பனியை வாடகைக்கு எடுத்து தனது ஜெமினி ஸ்டுடியோவிலே பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் இக்கம்பனி “ஜெமினி சர்க்கஸ்”என பெயர் மாற்றம் பெற்று பிரபல்யமானது.இத்திரைப்படத்தில் இடம்பெற்ற உச்சக்காட்சியில் ட்ரம் நடனம் மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. இக்காட்சிக்காக
500 நடனக்கலைஞர்கள் பங்கேற்று நடித்தனர்.இக்காட்சிக்காக மட்டும் அக்காலத்தில் ஐந்து லட்சம் செலவு செய்து சுமார் ஆறுமாத காலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முதன்முதலாக ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இமாலய வசூலுடன் வெற்றி கண்டது.வட இந்தியா முழுவதும்”சந்திரலேகா”
திரையிடப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் “சந்திரலேகா”பல ஆண்டுகளாக பேசு பொருளாக அமைந்தது.  நீளம் குறைக்கப்பட்டு ஆங்கில சப் டைட்டிலுடன் அமெரிக்கா,
இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டு தமிழன் புகழ் பறைசாற்ற காரணமாக இருந்தது.இலங்கையில் இப்படம் அதிக நாட்கள் ஓடி இமாலய சாதனை புரிந்தது .எனது நகரான கம்பளையில் இப்படத்தின் தலைப்பான “சந்திரலேகா “என்ற பெயரிலேயே ஒரு திரையரங்கு அமைத்து முதல் படமாக “சந்திரலேகா “வெளியிடப்பட்டு பல மாதங்களாக ஓடியது சாதனை என்றே கூறவேண்டும்.எஸ்.எஸ்.வாசன் என்ற மகாக் கலைஞரின் அரிய திரை சாதனைகள் இன்றளவிலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…!

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி

சதீஷ் கம்பளை இலங்கை.