அமெரிக்க அரசு ஊழியர்கள், உடனடியாக நாடு திரும்ப வேண்டும்
வாஷிங்டன், மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.
அந்த வகையில், மியான்மர் நாட்டுக்கு அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மியான்மரில் பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்