நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 56
உப்புச்சுவை வரிசையில் உள்ள மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு.
மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.
தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போதும், அல்லது கோஷம் போடும் போது தொண்டை பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றில் குடல் பகுதிகளில் புண்கள். இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
உட லில் நோய் எதிர்ப்பாற்றல் தேவையான வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. மணத்தக்காளி கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
ஜுரம் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.
காச நோய் கிருமிகள் நமது உடலுக்குள் புகுந்து, நுரையீரல்களில் தங்கி அந்த உறுப்புகளை பதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும். மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.
பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. மணத்தக்காளி கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல பலனைத் தருகிறது…!
ஆரோக்கியம் மிகுந்த பச்சைக் கீரைகளின் பயன்களை பகுத்தறிந்து அவற்றை உணவுடன் சேர்த்து உண்டு.
நமது ஆரோக்கியத்தை பேணி காப்போமாக…..
எதையும் வருமுன் காப்போம்…! நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:-சங்கரமூர்த்தி…. 7373141119