திமுக ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து அதிகரிக்கும்” – டிடிவி தினகரன் பேச்சு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் அமமுக வேட்பாளர் பஞ்சாட்சரம் மற்றும் செங்கம் தேமுதிக வேட்பாளர் அன்பு இருவரையும் ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:-
அதிமுகவும், பாஜகவும் தமிழக மக்கள் நலனுக்கு தீங்கு விளைவித்துள்ளது. அதனால் அவர்களை மக்கள் புறந்தள்ளும் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து அதிகரிக்கும். குற்றங்கள் அதிகரிக்கும்.
தமிழகத்தை மீட்டெடுக்க அமமுகவுக்கு வாய்ப்புத் தரும் விதமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். அமமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் ரஹ்மான்
தமிழ் மலர் மின்னிதழ்