உயர்நீதிமன்றம் கேள்வி

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி?” – உயர்நீதிமன்றம் கேள்வி

வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாக பெற்று அரசியல் கட்சி பிரசாரம் செய்வதாக எழுந்த புகாரில், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுச்சேரியில் பாஜக கட்சி சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டு பிரசாரம் செய்யப்படுகிறது. 

இந்த வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து வாக்களர்களின் மொபைல் எண்களுக்கு சில குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாகவும், அந்த குறுந்தகவலில் இந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டு அப்படி அந்த வாட்ஸ்-அப் குழுவில் இணையும்போது அந்த குழு மூலமாக பாஜக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும் எனவும் வாக்காளர்களின் மொபைல் எண்கள் அதில் இருக்காது எனவும் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று பாஜக இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

அரசியல் கட்சிகள் குறுந்தகவல்கள் மூலமாக வாட்ஸ்-அப் குழுவில் இணைய கோரி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், ஆதார் விவரங்களை பெற்று அரசியல் கட்சி பிரசாரம் செய்வது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடுமையான அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களான மொபைல் எண்களை பெறமுடிந்தது எப்படி ? எனவும் அதை எப்படி அவர்கள் பயன்படுத்தலாம் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி என்பதால் அமைதி காக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை மார்ச் 26 ஆம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அன்றைய தேதிக்கு (மார்ச் 26) தள்ளி வைத்துள்ளனர்