“பாவமன்னிப்பு “

1961 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த “பாவமன்னிப்பு “படம்  வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றது.(16.03.1961) .மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஓர் ஒருமைப்பாடு நிறைந்த படம்.இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் “ரஹீம் “
என்ற இஸ்லாமிய இஞைராக நடித்திருப்பார்.கதைப்படி எம்.ஆர்.ராதா (ஆழ்வார்)வின் சொந்த மகன் ரஹீம்.
சூழ்நிலையால் இஸ்லாமிய மதகுரு சித்தூர் வி. நாகையா சிவாஜியை தத்தெடுத்து இஸ்லாமியராக
அவர் இல்லத்தில் வளர்ப்பார்.கிறிஸ்துவ பெண்ணான தேவிகாவை விரும்புவார் ரஹீம்.இப்படி இப்படத்தில் மதகோட்பாடுகளை ஒன்றிணைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்து இயக்கியிருப்பார் “ப”வரிசை இயக்குனர் திரு. ஏ.பீம்சிங் அவர்கள்.தயாரிப்பு ஏவியெம் நிறுவனம். புத்தா பிக்ஸர்ஸ் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது.இக்கதையை எழுதி முதலில் திரைப்படமாக உருவாக்க இருந்தவர் நகைச்சுவை நடிகர் ஜே.பி.சந்திரபாபு. கதை அருமையாக இருக்கவே சிவாஜி கணேசனை வைத்து பீம்சிங் இயக்கத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரித்தார்.படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது சிவாஜி கணேசனின்
நெற்றிப்பரப்பில் கறுப்பான ஓர் தழும்பு காணப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சிவாஜியை ஆச்சரியமாக பார்த்தனர். அப்போது சிவாஜி கூறிய விளக்கம் இது,இஸ்லாமிய  மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுக்கும் ஓர் உண்மையான முஸ்லிம் ஐந்து வேளை நமாஷ் (தொழுகை) செய்பவனாக இருப்பான்.அப்போது இந்த தழும்பு கண்டிப்பாக இருக்கும் என்றாராம்.சிவாஜி
தன் தொழில் மீது வைத்திருந்த பக்தியும்,பாத்திரங்களை உணர்ந்து நடிக்கும்
ஆற்றலும் தான் அவரை நடிப்பின் பல்கலைக்கழகம் என இவ்வுலகமே போற்றுகின்றது.இப்படத்தில் இடம்பெற்ற “எல்லோரும் கொண்டாடுவோம் “பாடலில் ஓர் மத ஒற்றுமையை செய்திருப்பார் கவியரசு கண்ணதாசன். “அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி “என வரும் வரிகளில ப்ரணவமான
“ஓம்”என்ற சொல்லினை ஒவ்வொரு வரிகளிலும் இணைத்திருப்பார்.படத்தின் இசையைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கேட்டுக்கொண்டபடி இந்து, முஸ்லிம் ஒற்றுமையை இப்பாபாடலில்
கொண்டு வந்திருப்பார் கவியரசு.
இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வில்லத்தனம் அவரைத்தவிர வேறு யாராலும் செய்ய முடியாத பாத்திரமாகும்.மற்றும் ஜெமினி கணேசன்,சாவித்திரி,தேவிகா,
டி.எஸ்.பாலையா,எஸ்.வி.நாகையா,
எஸ்.வி.சுப்பையா,வி.என்.வி.ராஜம்பா போன்றோரின் நடிப்பு அபாரம்.அனைவரும் தன் பாத்திரங்களை நன்குணர்ந்து செய்துள்ளனர். “பாவமன்னிப்பு”தமிழ்த்திரை வரலாற்றில் மத ஒற்றுமை புரட்சி கண்ட ஓர் கண்ணியமான திரைப்படமாகும்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி

சதீஷ் கம்பளைஇலங்கை.