“மூன்று முடிச்சு”

தமிழ்த்திரையில் கதாநாயகன் கலாசாரத்தை மாற்றியமைத்து வில்லனுக்காக திரைக்கதை அமைத்து அசாத்திய துணிவுடன் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய “மூன்று முடிச்சு” திரைப்படத்தைப் பற்றிய சில பதிவுகள்:இப்படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது.”அபூர்வராகங்கள்”படத்தில் பாண்டியனாக அறிமுகமான சிவாஜிராவ் என்ற “ரஜினிகாந்த்”துக்குத் தான் இப்படத்தில் முக்கிய பாத்திரம்.படத்தின் நாயகன் “பிரசாத்”தாக  வரும் கமலஹாசன் படம் ஆரம்பித்து சில காட்சிகளுடன் மரணத்தை தழுவிக்கொள்வார்.  வில்லனாக வரும் “பாலாஜி”பாத்திரம் ரஜினிகாந்த்.நாயகி “செல்வி”பாத்திரம் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி இப்படத்தில் நடிக்கும் போது வயது 13.ரஜினிகாந்த் என்றொரு கலைஞனை தமிழ்த்திரை வாரியணைத்த படம் “மூன்று முடிச்சு”.இவரின் ஸ்டைலான நடிப்பிற்காகவே இப்படத்தை ரசிகர்கள் ஓரளவுக்கு வெற்றிபெற வைத்தனர்.
சிகரட்டை லாவகமாக வாயில் கவ்வும் ஒரு வித்தையை செய்து காட்டி படம் முழுக்க அட்டகாசம் புரிந்திருப்பார்.இவருடன் சிகரட்டும் இணைந்து நடித்திருக்கும்.ரஜினிக்கு இப்படத்தில் முதன்முதலாக பின்னணி குரல் கொடுத்தவர் இப்படத்தின் இசையமைப்பாளர்
எம்.எஸ். எம்.எஸ்.விஸ்வநாதன்.
“மன வினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள் ‘விதி வகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்”என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகள்.இப்படத்தில் மனச்சாட்சியாக வரும் நடிகர் நடராஜன் ரஜினியுடன் ஒன்றாக திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.இவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த ஓர் இரும்புப் பட்டறைக்கொல்லர். சில படங்களை இயக்கியுமுள்ளார்.இப்படத்தின் பெரும் பகுதிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் இல்லத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டது. இப்படத்தில்  ரஜினிக்கு நிறைய யோசனைகளை வழங்கி வித்தியாசமான பாத்திரமாக அமைய வழி வகுத்தவர் கமலஹாசனே. முதலில் இப்படம் 1974 இல் தெலுங்கு மொழியில்
“ஓ சீதா கதா”என்ற தலைப்பில்” சங்கராபரணம்”பட இயக்குனர் என்.கே.விஸ்வநாத்  இயக்கத்தில் வெளிவந்தது.ரஜினியின் வில்லன் வேடத்தை கமலஹாசன் செய்தார்.இதே படம் 1975 இல் “மற்றொரு சீதா “என்ற பெயரில் மலையாளத்திலும் வெளியானது.இதிலும் கமலஹாசனே வில்லன்.ரஜினிகாந்த்தை பெரிதும் பேச வைத்த படம்
“மூன்று முடிச்சு”.எங்கள் ஊரான கம்பளை ஆனந்தா திரையரங்கில் இப்படம் ஒரு மாதம் வரை ஓடியது. எங்கள் ஊர் ரசிகர்கள் ரஜினியை அப்போதே சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டனர்.கொழும்பு, யாழ்ப்பாணத்திலும் இப்படம் நன்றாக ஓடி வசூல் கண்டது.அன்று கே.பாலச்சந்தர் போட்ட “மூன்று முடிச்சு”இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இருப்பது அவரின் அசாத்திய துணிச்சல் தந்த சாதனை…
(Sgs )