அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள்

சென்னை

 அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்தத் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில், அதிமுக சார்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தொகுதிகள் முடிவான நிலையில், பாமக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த பிரமுகர்களான ஜி.கே.மணி பென்னாகரத்திலும், கே.பாலு ஜெயங்கொண்டான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) திலகபாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் ஆறுமுகம், தருமபுரியில் வெங்கடேசன், ஆற்காடு தொகுதியில் இளவழகன், திருப்பத்தூர் ராஜா, சேலம் மேற்கு தொகுதியில் அருள், செஞ்சியில் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.

செய்தி ரசூல்