உலகப்பாவை

மாண்பமை மக்களாட்சி

ஆட்சியும் ஊழலும்

கொள்ளைக்காரன்
கொற்றவன் ஆனால்
எல்லைக் கோடும்
கொள்ளைப் போகும்.

கொள்ளை அடிக்க
வருபவர் ஆட்சியில்
கொள்கைகூடக்
கொள்ளை போகும்.

பணத்தைத் தேடிப்
பதவிக்கு வருபவன்
பணம் வரும் என்றால் பண்பையும் விற்பான் பதவியையும் விற்பான்.

அரசியல் கோமாளிகள் கொள்ளை அடித்துக்
கொண்டாட்டம் போட்டால்,
கல்வி நிறுவனங்கள்
கொள்ளை நிறுவனங்களாய்க் கொண்டாட்டம் போடும்.

இயற்கைப் பேரழிவுக்கு இரையான மக்களின்
துயர் துடைப்பு நிதியையும் சுருட்ட நினைப்பவன்
அரசியல் வாழ்க்கை
இருட்டித்தான் போகும்.

ஆட்சியின்
அவலங்களுக்கு
இலஞ்சம்
ஓர் அளவுகோல்.

இலஞ்சப் பேய்கள்
அரியணை ஏறினால்
அரியணைகூட
இலஞ்சம் கேட்கும்.

பணநாயகம்
பாதை மாறினால்,
ஜனநாயகம்
சவக்குழிக்குப் போகும்.

ஆட்சித் தலைவர்
ஊழலில் மிஞ்சினால்,
ஆட்சித் துறைகள்
ஊழலில் மிதக்கும்.

ஊழலில் வாசலில்
ஆட்சித் தலைவர்
ஓர் அடி வைத்தால்,
ஆட்சித் துறைகள்
நூறடி வைக்கும்.

ஊழல் அரசியல்
நாட்டினை ஆண்டால்,
ஊழலே நாட்டில்
உற்பத்திப் பொருள் ஆகும்.

இலஞ்சங்களே ஆள்வோர்க்கு மஞ்சங்களானால் ,
பஞ்சங்கள் வாழ்வார்க்குத் தஞ்சங்கள் ஆகும்.

இலஞ்சத்தைக்
குவிப்பவன்
இலஞ்சத்தை
ஒழிப்பேன் என்பது, வேடிக்கையான
அரசியல் நாடகம்

இலஞ்சம் வாங்க
கொஞ்சமும் அஞ்சாதவர் மக்களாட்சிக்கு
மாறாத களங்கம்.

மக்கள் அவைகளில்
கேள்வி கேட்கவும்
இலஞ்சம் கேட்பவர் மக்களாட்சியைக்
கேள்விக்கு உரியதாக்கும் கேலிக்கு உரியதாக்கும் அவமானச் சின்னங்கள்.

நஞ்சு
அன்று கொல்லும்
இலஞ்சம்
நின்று கொல்லும்.

ஆள்பவர் ஊழலை நியாயப்படுத்தினால்,
ஆள்பவர் வரலாறு
காயப்படும்.

பல நாள்
மக்களை வஞ்சித்து
இலஞ்சத்தில் திளைக்கும் நஞ்சினும் கொடிய
அரசியலாளர்
ஒரு நாள்
துஞ்சவும் வழியற்று
அஞ்சி அஞ்சிச் சாவர்.

இலஞ்சம் வாங்கும்
இழிநிலை வாழ்க்கை கொஞ்சமும் இல்லாத குணமுடையவரே
நிரந்தரத் தலைவர்.

ஊழலை
வேரூன்ற வைக்காமல்
ஊழலின்
வேரறுத்துக் காப்பதுதான்
வீழாது வாழும்
மக்கள் நல அரசு

நாட்டை ஆள்பவர்
ஊழலில் திளைத்தால்,
நாட்டைக்
கொலை கொள்ளை
ஊழலே ஆளும்.

நாட்டில்
கொலை கொள்ளை
ஊழல் மிகுந்தால்,
நாட்டை ஆள்பவர்
ஊழல் பேர்வழியே.

இலஞ்சம் என்பது
அரசியல் ஆனால்,
அரசியல் சின்னங்கள்
அவமானச் சின்னங்களே.

அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர்
கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்