திருக்குறள் – உலகபாவை
20 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு வெண்பலகையில் குறளும் பொருளும் எழுதி வந்ததோடு,
இன்னொரு வெண்பலகையில்
என்னுடைய சிந்தனைகளையும்
தொடர்ந்து எழுதி மக்கள் பார்வைக்கு வைத்து வந்தேன்.
ஒரே தலைப்பில் 100 / 200 சிந்தனைகள். அவ்வகையில்
3000 சிந்தனைகள் எழுதி வைத்துள்ளேன். இதுவரை ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் என இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள்
மாண்பமை மக்களாட்சி என்பது
200 சிந்தனைகளை உள்ளடக்கிய
நூல். காலத்தின் தேவை கருதி
அவற்றை வழங்குகிறேன்.
?????????????
மாண்பமை மக்களாட்சி
- மக்களாட்சியின் மாண்பு
மன்னராட்சியின்
முடிமீது அடிவைத்து
மக்கள் கண்ட
புதிய விடியல்
மக்களாட்சி
அரசியல்
வளர்ச்சி வரலாற்றில்
எழுச்சி வரலாறு
மக்கள் ஆட்சி
சிக்கல் நிறைந்து
திக்குத் தெரியாது
தடுமாறிய
தடம் மாறிய
அரசியல் பயணத்தில்
இது வழி என்று
புதுவழி காட்டிய
கைகாட்டி ஒளியே
மக்களாட்சி
எல்லார்க்கும் எல்லாம்
என்னும் பொதுமைக்கு
ஆசனம் தந்து
சாசனம் வகுத்ததே
மக்களாட்சி
முடியரசிலும் படையரசிலும் அடிமையாய் அழுதழுது வெடித்துச் சிதறிய
உரிமைக் குருதிகள்
வடித்த புதிய
வரலாற்றுச் சாசனம்
மக்களாட்சி
அடிமையாய் ஆயிரம் நாள் வாழ்கின்ற வாழ்வை விட உரிமையோடு ஒரு நாள் வாழ்வதே வாழ்வு என
உரிமைச் சாசனத்தை உலகிற்குத் தந்தது
மக்களாட்சி
அரசர்கள் உலா வந்த
அரசியல் பல்லக்கில்
இரப்பவர்க்கும் இடமிட்டது மக்களாட்சி
மன்னருக்காக மக்கள் எனும் அடிமைச் சிறையை உடைத்து மக்களுக்காக மக்கள் என்னும் உரிமைக் காற்றை
நுகர வைத்தது
மக்களாட்சி
மன்னர்களை மக்களாக்கி மக்களை மன்னர்களாகிய மாயசக்தி
மக்களாட்சி
சுரண்டும் வர்க்கத்திற்கு சிறையினைத் தந்து
உழைக்கும் வர்க்கத்திற்கு அரியணை தந்தது
மக்களாட்சி
எனக்கும் ஒரு வாழ்வுண்டு
என நம்பி வாழ்வதற்கு எல்லார்க்கும் உரிமை உண்டு என்னும் பொது சாசனத்தை எல்லார்க்கும் வழங்கியது
மக்களாட்சி
திறமையை
அரியணை ஏற்றி
உரிமையைச்
சாசனம் ஆக்கிய
பெருமித ஆட்சி
மக்களாட்சி
மக்கள்
மக்களைத்
தலைவர்கள் ஆக்கி
மக்களோடு
மக்களுக்காக
மக்களால் நடைபெறுவது மக்களாட்சி
ஆள்பவன்
ஆண்டவன்
அவதாரம் என்ற
அரிதாரக் கதைகளை அகற்றிவிட்டு
வாழ்பவரின் வாழ்வுக்கு
வழிகாட்டும் தலைவன் என மறுமலர்ச்சி கண்டதுதான் மக்களாட்சி
சட்டங்கள் யாவும்
கடவுள் அருளிய
கட்டளைகள் அல்ல
மக்களே தீட்டிய
திட்டங்கள் என்பதைச்
சட்டமிட்டுக் காட்டியது மக்களாட்சி
விண்ணுலக கற்பனையில்
உலா வந்த மக்களை
மண்ணுலக நடைமுறைக்கு மாற்றியது
மக்களாட்சி
மேல் கீழ் என்னும்
வேற்றுமை போக்கி
வாழ்பவர் அனைவரும்
ஆள்பவர் என்று
மக்கள் உரிமைக்கு
மரியாதை தந்தது
மக்களாட்சி
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்னும் கறையைப் போக்கிப் பொதுநீதி எல்லார்க்கும்
என்னும் கரையை உயர்த்த உருவாக்கம் பெற்றதுதான் மக்களாட்சி
மக்களை ஆள்பவரை
மையமிட்டு அமையாமல் மக்களாய் வாழ்பவரை மையமிட்டு அமைவதே மக்களாட்சி
நிகழ்காலத்திற்கு
ஒளி ஊட்டுவதாகவும் வருங்காலத்திற்கு
வழிகாட்டுவதாகவும்
அமைவதுதான்
மக்களாட்சி
நல்லவர்கள் அரசாளும் வல்லவர்கள் ஆவாரேல்
வாழ்பவர் உரிமைக்கு தொல்லைகள் எந்நாளும் இல்லையெனும்
இலட்சியத்தில்
எழுந்ததுதான்
மக்களாட்சி
உரிமையை எல்லார்க்கும் உடைமையாக்கி
உரிமைக்கு உரியவர் பெருமைக்கு உரியவராக
உரிய வாய்ப்பும்
உரிய வசதியும்
உரியதாக்கும் பெருமைக்குரியதே
மக்களாட்சி
இறந்த கால நிகழ்வுகளைப் படிப்பினை யாக்கி
நிகழ்கால நிகழ்வுகளை பாடங்கள் ஆக்கி
எதிர்கால நிகழ்வுகளுக்குப் பட்டையும் தருவதுதான் மக்களாட்சி
பிறப்பால்
அனைவரும் ஒருவரே
சிறப்புகள் அவரவர்
செயலால் வரும் என
இறைவா நெறிக்குத்
திறப்பு விழா கண்டது மக்களாட்சி
எல்லாரும் கல்வி கற்றார் எல்லாரும் வேலை பெற்றார் எல்லாரும் விழிப்புணர்வு பெற்றார் எனப்
பெற்றன பலவாக்கும்
பெற்றயதே
மக்களாட்சி.
- கு. மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்
[12:15 PM, 3/4/2021] Ulagappavai: மாண்பமை மக்களாட்சி
- தலைவர்
தலைவனின் பெருமை காண்பதற்கு எளிமை
அரக்கத்தைக்
கல்லறையில் வைத்து, இரக்கத்தை
இதயத்தில் வைப்பவர்தான் தலைவர்
நா நயத்தில்
நாணயம் உள்ளவர்தான் நல்லாட்சித் தலைவர்
செய்வன சொல்லலும், சொல்வன செய்தலும்,
வல்லவர் தலைமைக்கு
நல்லவர் ஆவார்
சொன்ன சொல்லில்
சிறிதும் தவறாத
உண்மை நெஞ்சரே
உயர்ந்த தலைவர்
நான் என்னும்
முனைப்பு இல்லாமல்,
நாம் என்னும்
நினைப்பு உள்ளவரே
நல்லாட்சித் தலைவர்
தன் வாழ்வை
முன்னே வைக்காமல்,
தன் நாட்டை
முன்னே வைப்பவர்தான்
மக்கள் தலைவர்
தலைவனுக்குத்
தன் நாடு என்னும்
பெருமை வேண்டும் ;
தன்குற்றம் கேட்கும்
பொறுமை வேண்டும்
குற்றம் கண்டு
திருந்தும் தலைவரே
குற்றம் கண்டு
திருத்தும் தலைவர்
மக்கள் பணத்தில்
வாழ நினைக்காமல்,
மக்கள் மனத்தில்
வாழ நினைப்பவர்தான்
மக்கள் தலைவர்
ஆட்சிப் பொறுப்பைத்
தொழிலாய் ஏற்றுத்
தொண்டாய் மாற்றித் தொழுகையாய்க் கொள்பவரே தொழுகைக்குரிய
விழுமிய தலைவர்
இயற்கை பேரழிவின்போது
துயர் துடைக்கும் பணியில்
கட்சி என்னும் உணர்வின்றி மக்கள் என்னும் உணர்வோடு மக்கள் துயர் துடைப்பவர்
மக்களாட்சித் தலைவர்
கொள்ளையரையும்
கொலையரையும்
சுற்றமாய்க் கொள்ளாமல்,
நல்லவரையும்
வல்லவரையும்
சுற்றமாய்க் கொள்பவரே
நல்லாட்சி தலைவர்
எதிர் கொள்கை
உள்ளவரை
எதிரி எனக் கருதாமல்
மதிக்கத் தெரிந்தவர்தான் மக்களாட்சித் தலைவர்
கொள்ளை அடிக்கும்
கூட்டத்தை உருவாக்காமல், கொள்கை பிடிக்கும்
நாட்டத்தை உருவாக்குபவரே வரலாற்றுத் தலைவர்
தலைமை என்பது
ஒரு பொறுப்பு
என்பதை உணர்ந்து பொறுப்போடு செயற்படும் பொறுப்புணர்வு மிக்கவரே தலைவர் என்னும்
பொறுப்பிற்கு உரியவர்
தகுதி உடையவர்க்கே
தகுதிகள் வழங்கும்
தகுதி உடையவர்
தலைவர்
மக்களின்
பிரிவுகளை வைத்து
மக்களைப்
பிளவுப்படுத்தாதவரே
மக்களாட்சித் தலைவர்
தனி ஒரு சாதி
சமய உணர்வு அற்ற
மனிதநேயரே
மக்களின் தலைவர்
தொழுகையைத்
தொண்டாக்கிக் கொள்ளாமல், தொண்டைத்
தொழுகையாக்கிக்
கொள்பவர்
தொழுகைக்குரிய தலைவர்
தலைவர் என்பவர்
தீ யாகங்களுக்குத்
சிறப்புவிழா
செய்பவர் அல்லர்; தியாகங்களுக்குத்
திறப்புவிழா
செய்பவர்
தகுதி இருந்தால்
தலைவரின் வாரிசும்
தகுதி வரிசையில்
தலைவர் ஆகலாம்
சாதியும் சமயமும்
சாராத் தலைவரே
நீதியில் சரியாய்
நிற்கவும் முடியும்.
அருள்திரு திருக்குறள் தூயர்
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்