மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கண்டனம்.

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது வரலாற்றுப் பிழை எனக் கூறி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தொகையைக் குறிப்பிட்டு, சுட்டிக்காட்டிவிட்டு, 2021-22 ஆண்டுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமையாகும்” என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர், 2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுவிட்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை உட்பட சத்துணவு, மடிக்கணினி, சீருடை, பாடப்புத்தகம் வழங்குதல் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தனது உரையில் குறிப்பிடவில்லை.

பட்ஜெட் உரை அடங்கிய நூலை நாம் ஆராய்ந்த போது ஒரு ரூபாய் கூட இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது.

சென்ற பட்ஜெட்டின் ஒதுக்கீடு தொகை மற்றும் செயல்படுத்திய திட்டங்களைக் கொண்டு, நிதியே இல்லாமல் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்று வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் வரை பள்ளிக் கல்வித் துறை எவ்வாறு செயல்படும் என்பதை இந்த அரசு யோசிக்கவே இல்லை என்பது மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் செயலாகும்.

உடனடியாக இந்த வரலாற்றுப் பிழையை சரிசெய்து, பள்ளிக் கல்வித் துறைக்குத் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்