சட்டமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் மும்முரம்
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இதனையடுத்து தமிழக தேர்தல் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக கடந்த 10-ந் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்தனர். அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர்கள், தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர்.
முன்னேற்பாடு பணிகள்
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று கடலூர் வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் குறைந்தது 4 அலுவலர்கள் தேவை. இப்பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அவர்களது நிலை குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது.இதுதவிர ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.அதே வேளையில் தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடலூரில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆதார் எண் இணைக்க பரிசீலனை
புதிதாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் குறித்து, அனைத்து கட்சியினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் இடங்களே தேர்வு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்காக காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. எனவே வாக்காளர் அடையாள அட்டைகளில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.
மேலும் புதிதாக சுமார் 21 லட்சம் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் என்ற சம்பவம் நடைபெறவில்லை. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது என்பது, தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு போட்டிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி ரசூல்