கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு வாபஸ்!

புதுச்சேரி: முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் கிரண் பேடி. இவருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவந்தது.

இதனால் ஆளும் காங்கிரஸ் அரசு, துணைநிலை ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் அறிவித்ததை அடுத்து, துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயம்பத்தூரில் உள்ள ஐந்து கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற்று, அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை பொறுப்பு ஆளுனராக நியமித்தது

இதனால் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கு அளிக்கப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதை அடுத்து ஆளுநர் மாளிகை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மற்றும் முள்வேலிகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவ படையினர் கோயம்பத்தூர் திரும்பி சென்றனர்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்