திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டிய அவசியமில்லை வைகோ அதிரடி!
திமுகு கூட்டணிக்கு கமல்ஹாசனை கொண்டு வர ஸ்டாலின் ரொம்ப மெனக்கெட்டு வருவதாகவும், கமல்ஹாசன் பிடி கொடுக்காமல் இருப்பதாகவும் பேசப்படும் நிலையில், திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டிய அவசியமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக தெரிவித்தார்.
மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டு நிதி வழங்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய வைகோ, ”தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக. நம்மிடம் பணம் இல்லை. ஆனால், லட்சியங்களுக்காக, கொள்கைகளுக்காக போராடும் எண்ணம் இருக்கிறது”என்றார்.
“சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்க கூடும், அதைபற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன்” என்றவர், ”20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் இப்போது இல்லை”என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மதிமுகவில் துரைவைகோவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், வரும் தேர்தலில் துரை வைகோ போட்டியிடப்போவதாகவும் வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, வைகோ அதை மறுத்தார். துரைவைகோ இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என்று உறுதியாக கூறினார்.
திமுக கூட்டணியில் குறைந்த சீட் ஒதுக்குவதால் அதிருப்தியா? என்ற கேள்விக்கு, ”அதிமுகவையும், பாஜகவையும் வர விடக்கூடாது. அதற்கு திமுக வரவேண்டும். அதனால், குறைந்த சீட் கொடுத்தாலும் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம்” என்றார்.
திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இழுக்க பேரம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறதே? என்ற கேள்விக்கு, ”ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். திமுகவுக்கு 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் இப்போதைய சூழலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்