தே.மு.தி.க.வின் கொடி நாளை முன்னிட்டு தேர்தல் பிரச்சார வாகனத்தில் வலம் வந்த விஜயகாந்த்..

சென்னை: தேமுதிகவின் கொடி நாளை முன்னிட்டு இன்று தேர்தல் பிரச்சார வாகனத்தில் வலம் வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஜனனி, விஜயலதா என்று பெயர் சூட்டினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கினார். மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கினார். தேமுதிக பெற்ற வாக்குகள் அதிமுக, திமுகவை சற்றே யோசிக்க வைத்தன. அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு தேமுதிக வேட்பாளர்கள் காரணமாக அமைந்தனர். அந்த ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

2011ஆம் ஆண்டு தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக பல வழிகளில் முயற்சி செய்தது. ஆனால் விஜயகாந்த் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதிக இடங்களை வென்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார். அதன்பிறகு சட்டசபையில் நடத்த பிரச்சனைகளை தமிழ்நாடே அறியும்.

கூட்டணி கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் அப்போதய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையில் பேசினார். அதிமுக, தேமுதிக கூட்டணி முடிவுக்கு வந்தது.

2016ஆம் ஆண்டு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக்கூட்டணி களமிறங்கியது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர். விஜயகாந்த் கூட டெபாசிட்டை பறிகொடுத்தார்.

விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்படவே வெளிநாடு சிகிச்சைக்கு சென்றார். அவரது குரல் பாதிக்கப்படவே கம்பீர குரலை கேட்க முடியாமல் தொண்டர்கள் கவலையடைந்தனர். விஜயகாந்த் வீட்டிற்குள் ஓய்வெடுக்க, பிரேமலதாவும் அவரது மகனும் தீவிர அரசியலில் ஈடுபட்டனர்.

சில ஆண்டுகள் பொது இடங்களில் தலைகாட்டாமல் இருந்த விஜயகாந்த் கொடி நாளை முன்னிட்டு இன்று பிரச்சார வேனில் ஏறி நிற்பதைப்பார்த்து தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகம் அதிகரித்தது. விசில் அடித்தும் கேப்டன் என்ற உற்சாக முழக்கங்களையும் எழுப்பினர்.

தொண்டர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து கை அசைத்தார் விஜயகாந்த். அப்போது தொண்டர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறு கேட்கவே, ஒரு குழந்தைகளுக்கு ஜனனி என்று பெயர் சூட்டினார். மற்றொரு குழந்தைக்கு தனது பெயரையும், மனைவியின் பெயரையும் இணைத்து விஜயலதா என்று பெயர் சூட்டினார்.

விஜயகாந்தின் புதிய தோற்றமும் பிரச்சார வேனில் அவர் வலம் வந்ததையும் பார்த்து தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பழைய பன்னீர் செல்வம் ஈஸ் பேக் என்பது தொண்டர்களின் குரலாக இருக்கிறது. கம்பீர குரல் மீண்டும் கேட்குமா என்று பார்க்கலாம்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்