கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் கார் பேரணி?

கனடா: புலம்பெயர் தமிழர்கள் கார் பேரணி… தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி (B2B) வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் கார் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்களில் கொடிகளை ஏந்தியவாறு நீண்ட தூர பவனி இடம்பெற்றுள்ளது. பிரம்டனில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, அஜக்ஸ், மிசிசாகா, மார்க்கம் ஊடாக ரொறன்ரோவின் குயின்ஸ்பார்க் பகுதியில் நிறைவடைந்தது.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நீதிக்கான பேரணியில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை, தமிழ் கனேடியர்கள் முழக்கமாக முன்வைத்து கார் பேரணியை முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பேரணியில் பிரம்ப்டன் மேயர் ஹர்கிரத் சிங் கலந்துகொண்டதுடன், கனேடிய மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த பிரம்டன் மேயர், தமிழ் சமூகத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க தோளோடு தோள் நிற்கிறோம் என தெரிவித்தார். அத்துடன், இனப்படுகொலை, அரசியல் கைதிகள் பிரச்சினை என தமிழர் விடயத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் எனவும், நீதிக்காக வாதிடுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாகவும் பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்டும் திட்டங்களையும் குறிப்பிட்டார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்