மது போதையில் திருமண சம்பந்தங்கள் பேசாதீர்கள்!
மது போதையில் தயவுசெய்து திருமண சம்பந்தங்கள் பேசாதீர்கள்…..
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பதற்கு அர்த்தம் இருதரப்பினரும் ஓர் நல்ல சூழலில் உளமார்ந்த கருத்துக்களை நன்கு உள்வாங்கிக் கொண்டு கருத்தொருமித்து
ஆற்றக்கூடிய ஓர் புனிதமான கலாசாரம் நிறைந்த தெய்வீக வைபவமாகும்.ஆனால் இன்று ஒரு சிலர் பல தவறுகளை மறைத்து திருமணத்தை அரங்கேற்றி விடுகின்றனர்.
திருமணத்தின் முன் மணமகளோ மணமகனோ ஏதேனும் தவறுகள் புரிந்திருந்தால் இதுபற்றி முன் கூட்டியே இரு சாராரும் விளக்கமாக எடுத்துக்கூறுவதன் மூலம் எதிர்காலத்தில் இவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கைக்கு எவ்வித இடையூறும் அற்ற ஒரு சூழலை உருவாக்குவதன் வாயிலாக சிறப்பு காணலாம்.நடந்து போன கலாசாரத்திற்கு மீறிய செயல்கள் திருமணத்திற்குப் பின்
யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலம் ஆதாரத்துடன் இவைகள் தெரிய வரும் பட்சத்தில் மணவாழ்கை அப்போது பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும்.வரன் பெண் பார்க்க வருகை தரும் தருணத்தில் இருவரும் மனம் விட்டு பேசுவதன் மூலம்
பல விடயங்களை தெளிவாக உரையாடி தங்களின் எதிர்கால மணவாழ்விற்கு ஒளியேற்றலாம்.இருவர் மனமும் ஒரு சேர ஒத்துப்போகும் தறுவாயில் எதிர்காலத்தில் சந்தேகம் எனும் பேய் தலைதூக்காது….
இன்றைய நவீன காலத்தில் ஒரு சிலர் புனிதம் நிறைந்த திருமண பந்தத்தை
மதுபான விடுதிகளில் தீர்மானிக்கின்றனர்.
மது அருந்திய வண்ணம் மதுக்கோப்பைகளை கரங்களில் ஏந்தி
“ச்சியர்ஸ்”சொல்லிய வாறு உன் மகள்தான் என் வீட்டு மருமகள் எனவும்,உன் மகன்தான் என் மாப்பிள்ளை என்றும் முடிவு செய்வது.
கலாசாரத்திற்கு மட்டும் உகந்ததல்ல ,இதனால் உறவுகளின் நட்புக்கே பங்கம் வரக்கூடிய நிலை உருவாகலாம்.எனவே இல்வாழ்க்கையை
மலிவாக எண்ணி அதன் தெய்வீக புனிதத்தை கெடுத்து விடாதீர்கள்.அதே நேரத்தில் திருமண வயதில் இருக்கும் பெண்ணையோ,ஆணையோ சம்பந்தப்பட்ட உறவுகள் விசாரிக்கும் போது நீங்கள் அளிக்கின்ற பதில் நாகரிகமான முறையில் இருக்கட்டும். எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு இந்த சம்பந்தம் வந்தது,நாங்கள் வேண்டாமென்று கூறி விட்டோம் என்று தரக்குறைவான வார்த்தைகளை தயவு செய்து பிரயோகிக்காதீர்கள்.அதற்கு நாகரிகமான வார்த்தைகள் தமிழிழ் அகராதியில் நிறைய இருக்கின்றன அவைகளைக் கூறி ஆத்ம திருப்தியடையுங்கள்.ஒரு உறவுக்காரர் இல்லத்தில் திருமண வயதையொட்டிய ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் பேசி முடிக்க இன்னொரு உறவுக்காரர் கேட்க அவர்கள் சற்று இகழ்ச்சி கலந்த வார்த்தைகளை பிரயோகித்தனர்.இது ஏற்புடையதல்ல.ஒரு சில வசதி படைத்த,படித்த குடும்பங்களில் இது போன்று எடுத்தெரிந்து பேசும் நிகழ்வுகளை நாம் கேள்விப்படும் பட்சத்தில் உறவினர்கள் இடையே இக்குடும்பத்தைப் பற்றிய நல்லெண்ணங்கள் அகற்றப்பட்டு விடுகின்றது.தகுதி,படிப்பு,வசதிவாய்ப்பு
இவைகள் மட்டுமே புனிதமான திருமண பந்தத்தைத் தீர்மானிக்கும் என நினைக்கும் ஒரு சில உறவுகளே…! சற்று
மனிதநேயத்தையும்,தூய்மை நிறைந்த உள்ளத்திற்கும் கொஞ்சம் இடம் வழங்குங்கள். ஆணவம் நிறைந்த வார்த்தைகளால் உங்கள் பிள்ளைகளின்
வளமான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.
