ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசை பாராட்டினார்!
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக சட்டசபை கூட்டம், சட்டசபை வளாகத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் நடந்தது. பகல் 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. கூட்டத்தொடரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளுடன் ஆளுநர் உரையாற்றினார்.
அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்போம்:
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். தமிழக மக்கள் அனைவருக்கும் உரிய நேரத்தில் படிப்படியாக கொரோனா தடுப்பூசி (Covid vaccine) போடப்படும். RT-PCR சோதனையை முறையாக கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான். கொரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி அவர்களுக்கு சேரும். கொரோனா காலத்தில் உழைத்த முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு. தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பதே தமிழக அரசின் இலக்கு.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், சமூகநீதி, சமநீதியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் 435 மாணவர்கள் இந்தாண்டில் பயனடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டசபை தேர்தலை முறையாக எதிர்கொள்ள காவல்துறை தயாராக உள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் காவலில் இருக்கும் 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு (TN Govt) ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் முதல்வர் பழனிசாமி, ‘காவிரி காப்பாளன்’ பட்டத்திற்கு பொருத்தமானவர்.
பரிவுள்ள ஆளுமை’ என்பது இந்த அரசின் முக்கிய கோட்பாடாகும். பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று தமிழகம் வெற்றிநடை போடுகிறது. நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மேகதூது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எஞ்சிய கிராமங்களில் நவ.,30ம் தேதிக்குள் பாரத் நெட் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். கீழடி அகழ்வாராய்ச்சியில் சங்ககால பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை’ கட்டமைப்பின் மூலம் பல்வேறு அரசு சேவைகள் தடையின்றி வழங்கப்படும்.
முதல்வரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால், வீட்டிலிருந்தே அரசின் சேவைகளை விரைவில் பெறலாம். கொரோனா நிவாரண நடவடிக்கையாக 19.95 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ரேஷன்கார்டுகளுக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்க ரூ.5,402 கோடி கூடுதல் மானியத்தை அரசு ஏற்றது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்