நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -19

 நம்ம நாட்டு மருந்து…! (19)

பண்டைய தமிழர்கள் உளுந்தின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து உடல் ஆரோக்கியத்திற்கு உளுந்தை பிரதான உணவாக எடுத்து வந்தார்கள்….

பின்னர் அது அஞ்சறைப்பட்டியில் தாளிதம் செய்வதற்காக உறங்கிக் கொண்டு இருந்தாலும், தமிழர்களின் உணவு வகைகளில் முக்கியமானதுமான இட்லி,தோசை, வடை அப்பளம், இவற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மூலிகை அங்கமாகிவிட்டது..

உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்

உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன. நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் லிப்பிடுகளின் அளவுகளை கட்டுக்குள் வைக்கிறது.

பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை தடை ஏதும் இல்லாமல் சீராக நடைபெற உதவுகிறது. எனவே இதயம் சீராக செயல்பட உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தில் உள்ள இரும்புச்சத்தானது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நாள்முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படச் செய்கின்றன.

இரும்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகின்றது.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வினை அளிக்கின்றன. மேலும் இரும்புச்சத்தானது அதிக சோர்வு, தசை பலவீனம், அறிவாற்றல் குறைபாடு ஆகியவற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது. எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள உளுந்தினை உண்டு ஆற்றலைப் பெறலாம்.

மனச்சோர்வு, நரம்பு பலவீனம், நினைவாற்றல் குறைவு, ஸ்கிசோஃப்ரினா உள்ளிட்ட நரம்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தானது முழுமையாக குணப்படுத்த இயலாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது.

உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனதிற்கும், உடலும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. எனவே நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தினை உண்டு ஆறுதல் பெறலாம்.

உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் விட்டமின்கள் உடலில் சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெற உதவுவதோடு உடலில் வலி உள்ள பகுதியைச் சரிசெய்கின்றன.

உளுந்தினை முட்டை மற்றும் பஞ்சுடன் சேர்த்து எலும்பு முறிவுச் சிகிச்சைக்கு கட்டுப்போடும் பழக்கம் நாட்டுமருத்துவத்தில் உண்டு. மேலும் உளுந்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது உடலினை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.

உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும அழற்சி, பரு உள்ளிட்ட சருமக் காயங்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வினைத் தருகின்றன.

மேலும் இது சரும மேற்பரப்பு முழுமைக்கும் சீரான இரத்த ஓட்டம் ஏற்படச் செய்து சருமத்தை அழகாகவும், இளமையாகவும் இருக்க உதவுகிறது. எனவே உளுந்தினை உண்டும், சருமத்தில் பூசியும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

உளுந்தில் உள்ள புரதச்சத்தானது தசைகளின் வளர்ச்சியையும், அவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை உறுதியானதாகவும், அழகாகவும் மாற்றுகிறது. எனவே உளுந்தினை உண்டு ஆரோக்கியமான தசைகளைப் பெறலாம்.

உலர்ந்த பொலிவிழந்த கேசத்தில் உளுந்தினைப் பயன்படுத்தும்போது அது கேசத்திற்கு பொலிவையும், வலிமையையும் கொடுக்கின்றன.

இதற்கு காரணம் உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகும். மேலும் பாசி பயறுடன் உளுந்தினை சேர்த்து உபயோகித்தால் பொடுகு தொந்தரவு நீங்குவதுடன் கேசம் பளபளக்கும்.

உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக கர்பிணிகள் தங்களது உணவில் அடிக்கடி உளுந்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

மேலும் இதில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, போலேட்டுகள் போன்றவை கர்பிணிக்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமனவையாகும். எனவே கர்ப்பிணிகள் உளுந்தினை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தானது உடலில் யூரிக் அமிலத்தின் அளவினை அதிகரிக்கச் செய்யும். எனவே கீல்வாதம், சிறுநீரகக்கற்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்கள் உளுந்தினைத் தவிர்ப்பது நலம்.

உளுந்தானது வாங்கும்போது திரட்சியானதாக, ஒரே சீரான நிறத்துடன் உள்ளவற்றை வாங்க வேண்டும். ஈரப்பதமில்லாத பெரிய பாத்திரத்தில் உளுந்தினை சேகரித்து அதிக வெப்பமும், ஈரப்பதமும் இல்லாத இடத்தில் வைத்து பயன்படுத்தலாம்.

எனவே இயற்கை நமக்கு அள்ளித் தந்த அரிய பல மூலிகை பொக்கிஷங்களில் உளுந்தும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அதை முறை பிரகாரம் உண்டு ஆரோக்கிய வாழ்க்கை மேற்கொள்வோமாக…!

 நோய் வருமுன் காப்போம்.

நல்ல (உணவு)மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 மூலிகை தொகுப்பு:-சங்கரமூர்த்தி 7373141119