ஜெ,பேரவை சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கோயில் வெண்கல சிலை திறப்பு?

மதுரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டிய கோயிலை நாளை காலை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குண்ணத்தூர் அருகே அதிமுகவின் ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அதிமுகவினர், ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்காகக் கோயில் கட்டியுள்ளனர். இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்க்கவும், வணங்கவும், பொதுமக்கள் அமரவும், ஒய்வெடுக்கவும் சுமார் 12 ஏக்கர் சுற்றளவுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு 7 அடி அளவில் முழு நீள வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டது. இந்தக் கோயிலை நாளை (30-ம் தேதி) முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இதற்காக அவர்கள் விமானத்தில் நாளை காலை மதுரை வருகின்றனர். அவர்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் விமானம் நிலையம் முதல் கோயில் அமைந்துள்ள திருமங்கலம் வரை வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று யாகசாலை அமைத்து அதில் 11 ஹோம குண்டங்கள் வடிவமைக்கப்பட்டு 21 சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். இந்த யாக சாலை பூஜை நாளை காலை வரை நடக்கிறது. அதன் பிறகு புனிதநீர் கலசத்தில் தெளித்த பிறகு கோயில் திறப்பு விழா நடக்கிறது. இந்தக் கோயிலை தரிசிக்க தென் மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர், பாதயாத்திரையாக மதுரை வந்த வண்ணம் உள்ளனர். கோயில் திறப்பு விழா ஏற்பாட்டினை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்து வருகிறார்.

இதுகுறித்து இன்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை காலை கோ (பசு) பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 120 கட்சி நிர்வாகிகளுக்கு கோ தானத்தை முதல்வரும், துணை முதல்வரும் வழங்குகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 234 நலிவடைந்த நிர்வாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்து தெரிவித்துப் பொற்கிழி வழங்குகின்றனர்.

அதன் பிறகு ஜெ. பேரவை சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் பெயரில் ஒரு கார் பரிசும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் பெயரில் கார் பரிசும் அவர்கள் கையால் வழங்குகின்றனர்.

அதனைத் தொடர்ந்து திருக்கோவிலை இருவரும் திறந்து வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கோயில் வளாகத்தில் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடுகின்றனர்.

ஜெயலலிதாவின் திருக்கோயில் அமைப்பதற்கு உரிய அனுமதியும், அரசாணையும் வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜெ.பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்’

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.