உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி.

புதுடெல்லி:

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. 

விரிவான விவாதங்களுக்கு பிறகே பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையில் இந்த புதிய வேளாண் சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் சமீபத்தில் ஒரு டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டது மற்றும் செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்த சம்பவங்கள் நடந்தன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 3ம் பாலினத்தோருக்கு சம உரிமைகள் அளிப்பதற்காக, பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியில் இந்தியா முன்னிலையில் இருப்பதை உலகமே பாராட்டுகிறது. தூத்துக்குடி- ராமநாதபுரம் இடையிலான கேஸ் பைப் லைன் அமைக்கும் பணி விரைவாக நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

செய்தியாளர் ரஹ்மான்